இட நெருக்கடியில்  சிக்கித் தவிக்கும்  பெரம்பலூர் தினசரி மார்க்கெட் இடம் மாறுமா?

இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினசரி மார்க்கெட்டை வேறிடத்துக்கு மாற்ற மாவட்ட
Updated on
1 min read

இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தினசரி மார்க்கெட்டை வேறிடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் வலியுறுத்துகின்றனர்.
இந்த மார்க்கெட்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன. வெளிப்பகுதியில் இறைச்சிக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், மளிகைக் கடைகள், மருத்துவமனைகள், தரைக்கடைகள் உள்ளன.  
இக்கடைகளுக்கு மாதம் சுமார் ரூ. 700 முதல் ரூ. 750 வரை வாடகையாக நகராட்சி வசூலிக்கிறது. இங்கு காய்கறிகளை வாங்க நகராட்சிக்குள்பட்ட பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை மட்டுமன்றி வடக்குமாதவி, எளம்பலூர், ஆலம்பாடி, செஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
இங்கு நொச்சியம், செட்டிக்குளம், கீழக்கணவாய், இரூர், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடியாகும் தக்காளி, வெண்டை, கத்தரி, முருங்கை, கீரைகள் ஆகியவை சில்லறை மற்றும் மொத்த விலைக்கு விற்கப்படுகின்றன.
வியாபாரிகள் அவதி:
நகராட்சி ஒரு கடையை 2 ஆகப் பிரித்து வாடகைக்கு விட்டுள்ளதால் ஏற்படும் இடநெருக்கடியால் வியாபாரிகள் குறுகிய இடத்திலேயே காய்கறி மூட்டைகளை வைக்க வேண்டியுள்ளது. இதனால் கடையின் முன்பாகவே மூட்டைகளை அடுக்கிவிடுகின்றனர். வியாபாரிகளுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கு கிடையாது. கான்கிரீட் மேற்கூரைகளின் பெரும்பாலான "கைகள்' உடைந்துள்ளதால் மழைக் காலத்தில் ஒழுகி மழைநீரில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.
மழைக் காலத்தில் உண்டாகும் சகதியில் அழுகிய காய்கறிகளைத் தொடர்ந்து கொட்டுவதால் கொசு உற்பத்தியாகிறது. காய்கறிக் கழிவுகளை முறையாக அகற்றாததால், சுற்றுச்சூழல் பாதிப்பதாக வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் அவதி:
மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை வட்டாட்சியர் அலுவலகச் சாலையிலும், மார்க்கெட் வெளிப்புறத்திலும் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிக்கிறது. கடைக்காரர்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்துகின்றனர்.
காய்கறி மார்க்கெட்டின் முகப்பில் நடைபாதையில் சிலர் கடை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சிரமத்துடனே வந்து செல்ல வேண்டியுள்ளது.  இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறியது:
"இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக குடிநீர் வசதி இல்லை. இடநெருக்கடியால் நாங்கள் சிரமத்தோடு வியாபாரம் செய்கிறோம்.
வாகனங்களை நிறுத்த இதுவரை எந்த வசதியையும் நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
சிலர் மார்க்கெட்டுக்கு வராமலேயே அந்தந்தப் பகுதிகளில் காய்கறி வாங்குவதால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரும் காய்கறிகளை இறக்க, வாகனம் நிறுத்த இடமில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com