பாரம்பரிய முறையில் மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்க்கு மக்களிடையே வரவேற்பு உள்ளதால், சோலார் மின்சாரத்தில் இயங்கும் மரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார் பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி இளைஞர்.
கடந்த காலங்களில், நாம் மாடு பூட்டிய செக்குகளில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகளையே பயன்படுத்தி வந்தோம். நவீன இயந்திரங்களின் வருகையும், பதப்படுத்திய வேதியியல் முறைகளும் எண்ணெய் வகைகளின் பயன்பாட்டை மாற்றி அமைத்தன.
கடந்த சில ஆண்டுகளாக கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை மறந்து, சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் வகைகளை சமையலுக்கு பயன்படுத்தத் தொடங்கியதால், மரச்செக்கைப் பயன்படுத்தி எண்ணெய் எடுத்து வந்த ஆலைகள் நஷ்டத்தில் இயங்கி வந்தன.
இதனால் பெரும்பாலான ஆலைகள் மூடப்பட்டன. அண்மைகாலமாக, சமூக வலைதளங்கள் மூலம் மரச்செக்கினால் ஆட்டப்படும் எண்ணெய் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பலரும் மரச்செக்கு எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்த முன்வந்துள்ளனர். மேலும், தற்போது பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்து வருவதால், மரச்செக்குகளுக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அழியும் நிலையில் இருந்த மரச்செக்கின் நன்மைகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
ஒரு சில இடங்களில், தற்போது மாடுகளைப் பயன்படுத்தாமல் மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டு எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கனவாய் கிராமத்தைச் சேர்ந்த எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர் க. விக்ரம், கடந்த ஓராண்டாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார். தற்போது, சூரிய ஒளியில் இயங்கக்கூடிய மரச்செக்கை பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் எண்ணெய் பிழிந்து விற்பனை செய்து வருகிறார். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நான் அப்பணியை விட்டு விட்டு எனக்கு சொந்தமான வயலில் பண்ணை அமைத்து இயற்கை முறையில் புடலை, பாகற்காய், நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன்.
தற்போது, ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் சோலார் மின்சாரத்தில் இயங்கக்கூடிய மரச்செக்கு அமைத்துள்ளேன். மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய் வாசனை மாறாமல், நல்ல ருசியுடனும், ஒரு ஆண்டுக்கும் மேலாக கெட்டுப் போகாமலும் இருக்கும்.
நாங்கள் தேங்காய் எண்ணெய் 1 லிட்டர் ரூ. 200, நல்லெண்ணைய் ரூ. 300, கடலை எண்ணெய் ரூ. 230-க்கு விற்பனை செய்கிறோம். எண்ணெய் வாங்குவதற்கு தேவையான பாத்திரங்கள் கொண்டுவந்தால் ரூ. 10 குறைத்துக்கொள்ளப்படும்.
தற்போது, மாதம்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்றால், மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர் மட்டுமே செலவாகும். இந்த எண்ணெய் அடர்த்தியாக இருப்பதால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும். மேலும், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது என்பதால், மரச்செக்கினால் ஆட்டப்படும் எண்ணெய்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.