திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள வேகத் தடுப்புகளால் விபத்துகள் அதிகரித்து வருவதை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகளவில் நிகழும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகள் நிகழும் மாவட்டங்களில் பெரம்பலூரும் முன்னிலையில் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த 67 சாலை விபத்துகளில் 80 பேரும், 2018 ஆக. 2 வரை 31 சாலை விபத்துகளில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை இடையிலான பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள்பட்ட சுமார் 83 கி.மீ. தூரமுள்ள நான்கு வழிச்சாலையில் 24 மணி நேரமும் அதிக வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது.
அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களாலும், இணைப்புச் சாலைகள் அதிகளவில் இருப்பதாலும் விபத்துகள் நிகழ்கின்றன. இச்சாலையில் சின்னாறு, வாலிகண்டபுரம், செங்குணம், சிறுவாச்சூர், பாடாலூர் உள்பட 14 இடங்கள் அதிக விபத்து நிகழும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, சிறுவாச்சூரில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
பராமரிப்பற்ற நிலை: தேசிய சாலையின் மையப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான தடுப்புகள் உடைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் கடந்து செல்வதற்கும் பாதைகளை உருவாக்கியுள்ளனர். இதுபோன்ற இடங்களில் இருசக்கர வாகனங்களும், பொதுமக்களும் எந்தச் சிக்கலும் இல்லாமல் கடந்து செல்கின்றனர். வளைவுகள், பாலங்கள், சாலையில் உள்ள தடுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையிலான பிரதிபலிப்பான்களும் பல இடங்களில் இல்லை.
அசுர வேக வாகனங்கள்: தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை வாகனங்கள் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாலும், அதிகாலை வேளைகளில் ஓட்டுநர்கள் திடீரென அயர்வதாலும், வாகனங்கள் திடீர் பழுதாவதாலும் விபத்துகள் நிகழ்வது தொடர்கிறது. எச்சரிக்கை பதாகைகளைக்கூட அலட்சியப்படுத்தி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்கின்றனர். குறைந்த நேரத்தில் அதிக தூரத்தைக் கடக்க வேண்டும் என்னும் நோக்கில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உள்ளனர். பல ஓட்டுநர்கள் ஓய்வின்றி பணியில் அமர்த்தப்படுவதால் விபத்துகள் நிகழ்கின்றன.
அதிகரிக்கும் விபத்துகள்: இதுபோன்று அதிவேகமாக சாலையைக் கடப்பதால் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இதைக் கட்டுப்படுத்தக் கோரியும், வேகத்தடுப்புகள் அமைக்கக் கோரியும் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கிணங்க, போலீஸாரும் சாலைகளில் வேகத் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையைப் பொறுத்தவரை 3 கிலோ மீட்டருக்கு இடைப்பட்ட பகுதிகளில் வேகத் தடுப்புகளோ, வளைவுகளோ அமைக்கக் கூடாது என்பது விதி. இதை மீறி 2 கிலோ மீட்டருக்கு ஒரு வேகத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் இரவுகளில் தடுப்புகளை அகற்றிவிட்டு, பகல் நேரங்களில் மீண்டும் அதே இடத்தில் வைத்து வந்தனர். ஆனால், அவை தற்போது கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இதனால், இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து வாகன ஓட்டுநர் சி. ராஜூ கூறியது:
வேகத்தைக் கட்டுப்படுத்தவே பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டுள்ள வேகத் தடுப்புகள் விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. வேகத் தடுப்புகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்படுகின்றன. இணைப்புச் சாலைகளிலோ, கிராமங்களுக்குச் செல்லும் அணுகு சாலைகளிலோ வைக்கப்படவில்லை.
உள்ளூர் வாகன ஓட்டுநர்களுக்கு எந்தெந்த இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது தெரியும். இதர பகுதி ஓட்டுநர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதனால் அதிவேகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்களில் அல்லது தடுப்புச் சுவர்களில் மோதி விபத்து ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் தடுப்புகளை இரவு நேரங்களில் அகற்ற வேண்டும். அதேபோல, தடுப்புகள் இருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் எச்சரிக்கை பதாகை அமைப்பதோடு, இரவு நேர ஒளிரும் ஸ்டிக்கர்களையும் ஒட்டி வைக்கவேண்டும் என்றார் அவர்.
தேசிய நெடுஞ்சாலையில் பெருகிவரும் விபத்துகளைத் தடுக்க சாலை மேம்பாட்டுப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.