பெரம்பலூர் அருகே வறுமையில் வாடும் சுதந்திரப் போராட்டத் தியாகி

பெரம்பலூர் அருகே சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகிறார். 
Updated on
2 min read


பெரம்பலூர் அருகே சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகிறார். 
பெரம்பலூர் மாவட்டம், வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் போ. ரெங்கசாமி (97). சிறுவயதிலேயே தாய்நாட்டின் மீது மிகுந்த பற்றுகொண்டிருந்த இவர், தனது குடும்ப வறுமையால் பிழைப்புத் தேடி சென்னைக்கு சென்றார். அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாலும், தன் தாய்நாடு அடிமைப்பட்டு கிடக்கிறதே என்னும் கவலை மட்டும் மனதுக்குள் கனன்று கொண்டிருந்தது. காந்தியின் அஹிம்சை வழியில் போராட மனமில்லாத அவர் தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியோடு நேதாஜியின் படையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பர்மாவில் 6 மாதப் பயிற்சியெடுத்துக்கொண்ட இவர், ஆங்கிலேயேப் படையினருடன் நடைபெற்ற போரின்போது கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டனை பெற்றார். நாடு சுதந்திரம் பெறும் வரை நோதாஜியின் படையில் பணியாற்றி, 1954-ல் தனது சொந்த ஊருக்கு வந்தபோது கிராமமே சேர்ந்து அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தது. பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த செல்லம் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்ட ரெங்கசாமிக்கு செல்லப்பாப்பு, அழகம்மாள், ஜோதி ஆகிய 3 பெண்கள். 97 வயதைக் கடந்துவிட்ட நிலையிலும் ரெங்கசாமி இன்று வரை தனது தேவைகளை தானே பூர்த்தி செய்துகொள்கிறார். 
சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விழாக்களில் தவறாமல் பங்கேற்கும் இவர், தனது சட்டையில் நேதாஜி புகைப்படத்துடன் கூடிய பேட்ஜை அணிந்தே வலம் வருகிறார். 
அடிமைப்பட்டுக் கிடந்த தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகி ரெங்கசாமி தற்போது குடியிருக்க வீடு இல்லாமல் தனது மாற்றுத்திறனாளி மகளுடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். வரகுபாடி கிராமத்தில் இவர் வாழ்ந்து வந்த குடிசை வீடு இடிந்து விழுந்து முள்புதர்களால் சூழப்பட்டுள்ளது. வாரிசுக்கு அரசுப்பணி, வீடு கட்டித் தரக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

எஞ்சிய தியாகிகளுக்காவது அடிப்படை வசதிகள் வேண்டும்
காந்தியின் அஹிம்சை வழியில் போராட எனக்கு விருப்பமில்லாததால், நேதாஜியின் படையில் இணைந்தேன். 6 மாசம் ரைபிள் கன், மிஷின்கன் துப்பாக்கிப் பயிற்சி பெற்றேன். வெள்ளைக்காரர்களுக்கும், நேதாஜி படைக்கும் நிகழ்ந்த சண்டையின்போது என்னை போலீஸார் கைது செய்து, இன்ஜின் சிறையில் அடைத்தார்கள். 6 மாதத்துக்கு பிறகு விடுதலையானேன்.
சுபாஷ் சந்திரபோஸ், நேரு, மேஜர் பொன்னுசாமி, ராமனுஜராவ், ஜன்னல் லோகநாதன் உள்ளிட்ட தலைவர்களை எனக்கு நன்கு தெரியும். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி உயிரிழந்தார். பராமரிக்க வசதியில்லாததால் நான் வசித்த குடிசை வீடு இடிந்து தரைமட்டமாகிவிட்டது. அந்த வீட்டை கட்டித் தரக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், துறைமங்கலம் புதுக்காலனி பகுதியில் உள்ள எனது மகள் செல்லப்பாப்பு வீட்டில் வசிக்கிறேன். மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ள, எனது 2-வது மகள் அழகுக்கு அரசுப் பணி வழங்கக்கோரி மனு அளித்தும் பலனில்லை. அதேபோல, எனது உடல் நலப் பாதிப்புக்கு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க உள்ளேன்.
என்னைப் போல பலருக்கு மாநில அரசின் உதவித்தொகை மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசின் உதவித்தொகையும் கிடைத்தால் வறுமையிலிருந்து மீள வாய்ப்புள்ளது. 
பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 450 சுதந்திரப் போராட்டத் தியாகிகள் இருந்த நிலையில், தற்போது 3 பேர் மட்டுமே உள்ளோம். குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் மட்டுமே என்னைப் போன்றோர் கெளரவிக்கப்படுகிறார்கள். இதர நாள்களில் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் தியாகிகள் பலரும் வறுமையில் உள்ளனர்.
இருக்கும் கொஞ்ச நாள்களில் என்னைப் போன்றோரைக் கெளரவப்படுத்தவில்லை என்றாலும், எங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார் தியாகி ரெங்கசாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com