அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
By DIN | Published On : 01st April 2019 09:13 AM | Last Updated : 01st April 2019 09:13 AM | அ+அ அ- |

அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை எனத் தெரிவித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன்.
பெரம்பலூர் மக்களவை தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர் டி.ஆர். பாரிவேந்தரை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க பெரம்பலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த அவர், பெரம்பலூர் தீரன்நகர் அருகேயுள்ள அக் கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டி:
தி.மு.க.பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரிகளில் வருமான வரி சோதனை செய்திருப்பதை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 2014 பொதுத் தேர்தலின்போது, அளித்த தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றவில்லை. முந்தைய தேர்தலில் தேநீர் விற்றவர் என்றார். இத் தேர்தலில், இந்தியாவின் காவலாளி என்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, சேலம் நகரில் 300 ஏக்கர் பரப்பளவிலான ஏரியை தூர்வாரிவிட்டு பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வருகிறார். காவிரி டெல்டா சமவெளிப் பகுதியில் 12 ஆயிரம் பாசனப்பகுதி இன்று பாலைவனப் பகுதியாக மாறியுள்ளது.
பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சிக்கு தொடர்புள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தமிழக அரசு தடுக்கவில்லை, அந்த சம்பவத்தை குறும்படமாக எடுத்து வெளியிட்ட முகிலனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தேர்தல் ஆணையம், நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றார் அவர். பேட்டியின்போது கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் வீ. ஞானசேகரன், துணைச் செயலர்கள் தியாகராஜன், என். ஜெயராமன், திமுக மாவட்ட. செயலர் சி. ராஜேந்திரன், நகரச் செயலர் எம். பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
ராணுவ ரகசியங்களை சொல்லி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார் மோடி:
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை ஆதரித்து அரியலூர் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
அடக்குமுறை அரசாங்கமாக மத்திய, மாநில அரசுகள் உள்ளன. அதிமுகவை அடிபணிய வைக்கவே அமைச்சர்கள் வீடுகளில் பாஜக தொடர்ந்து சோதனைகளை நடத்தியது.
எத்தனை சோதனைகள் நடத்தினாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். நீட் தேர்வில் மக்களை ஏமாற்றியவர்கள் ஆளும் கட்சியினர். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கேட்டு மத்திய அரசை வலியுறுத்துவோம் என மீண்டும் தமிழக முதல்வர் கூறுகிறார்.
மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக, ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய ராணுவ ரகசியங்களை மக்களிடம் கூறி வாக்குசேகரிக்கிறார் என்றார்.
கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் உலகநாதன் தலைமை வகித்தார்.
திமுக மாவட்டச் செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலர் கு.சின்னப்பா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் மு.செல்வநம்பி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.