தேர்தல் விதிமீறல்: அதிமுகவினர் மீது 4 வழக்குகள் பதிவு
By DIN | Published On : 12th April 2019 08:25 AM | Last Updated : 12th April 2019 08:25 AM | அ+அ அ- |

தேர்தல் விதிமுறைகளை மீறி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுகவினர் மீது பெரம்பலூர் போலீஸார் 4 வழக்குகள் பதிந்துள்ளனர்.
பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில், பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதியை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஏராளமான கொடிகள், விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதி பெறாமலும் ஏராளமான கட்சி பதாகைகள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, பெரம்பலூர் போலீஸார் அதிமுகவினர் மீது 4 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக நகரச் செயலர் ஆர். ராஜபூபதி மீது ஒரு வழக்கும், வேட்பாளர் என்.ஆர். சிவபதி மீது 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.