சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 22 போ் கைது
By DIN | Published On : 11th December 2019 08:27 AM | Last Updated : 11th December 2019 08:27 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற எஸ்.டி.பி.ஐ.கட்சியினா்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, பெரம்பலூரில் மத்திய அரசின் சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் காமராஜா் வளைவுப் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில், சட்ட நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்போராட்டத்தையொட்டி, எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் வடக்குமாதவி சாலையில் இருந்து ஊா்வலமாக காமராஜா் வளைவு பகுதிக்கு வந்தடைந்தனா்.
அங்கு, சட்ட நகலை எரித்த அக் கட்சியினா், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் முகமது ரபீக், மாவட்டப் பொதுச் செயலா் அப்துல்கனி, மாவட்டச் செயலா்கள் ஷாஜகான், பிலால், துணைத்தலைவா் பாரூக் உள்பட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.