ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட அரும்பாவூர் மக்கள்
By DIN | Published On : 12th February 2019 08:46 AM | Last Updated : 12th February 2019 08:46 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சியைச் சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு வீடு இல்லாததால் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்திலும் கோரிக்கை அளித்திருந்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் அதிருப்தியைடந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரும்பாவூர்- பூலாம்பாடி செல்லும் சாலையில் விவசாயம் செய்யாத புன்செய் நிலம், அரும்பாவூர் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு வடபுறம் உள்ள நிலம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள நிலத்தில் ஏதாவதொரு இடத்தை கையகப்படுத்தி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து கலைந்து சென்றனர்.