பிரம்மபுரீசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 12th February 2019 08:45 AM | Last Updated : 12th February 2019 08:45 AM | அ+அ அ- |

பெரம்பலூர் அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
பெரம்பலூர் நகரில் அமைந்திருக்கும் இக்கோயில் மாசி மகத் திருவிழா விஷேசமானது. நிகழாண்டு தேரோட்டம் பிப்.19 ஆம் தேதி நடைபெறஉள்ள நிலையில், அதற்கான கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை பிரம்மபுரீசுவரர் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அப்போது கொடிமரத்துக்கு பால்,தயிர்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ஹம்ச, சிம்ம, சேஷ, சூரியபிரபை, சந்திரபிரபை, யானை வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பிரம்மபுரீசுவரர் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெற உள்ளது.
பிப்.17 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவமும், 18 ஆம் தேதி கைலாச வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.
மாசிமகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப். 19 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
நகரின் பிரதான வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மாலையில் நிலைக்கு வந்தடையும். பிப். 20 ஆம் தேதி கொடியிறக்கமும், 23 ஆம் தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மணி, தக்கார் முருகையா, முன்னாள் அறங்காவலர்கள் பெ. வைத்தீசுவன், சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.