போக்குவரத்து நெரிசலில் திணறி வரும் பெரம்பலூர் நகரின் பிரதான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல் விளக்குகள் செயல்படாததால், போக்குவரத்து நெரிசலும், பொதுமக்கள் அவதியும் தொடர்கிறது.
பெரம்பலூர் நகரில் வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. குறிப்பாக, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, விளாமுத்தூர் பிரிவு சாலை, பாலக்கரை, புகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் எந்நேரமும் நெரிசல் உள்ளது.
நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், தொடர் விபத்துகளையும் தடுக்க புறநகர் பேருந்து நிலையம், பாலக்கரை, விளாமுத்தூர் சாலை, சங்குப்பேட்டை, கனராவங்கி சாலை, காமராஜர் வளைவு ஆகிய இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், அண்மையில் வீசிய பலத்த காற்றில் புறநகர் பேருந்து நிலையப் பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் கீழே விழுந்து சேதமடைந்தது. இதர பகுதிகளில் உள்ள சிக்னல்களை முறையாகப் பராமரிக்காததால் அவை அனைத்தும் பழுதடைந்து காட்சிப் பொருளாக, தனியார் விளம்பர நிறுவனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மேலும், ஒருசில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் கம்பங்கள் மீது வாகனங்கள் மோதி சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக, வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கிறது. இதனால், இந்தச் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
போலீஸார் பற்றாக்குறை:
நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தத் தேவையான காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இருக்கும் ஒன்றிரண்டு காவலர்களும் விடுமுறை அல்லது இதர பணிகளுக்குச் சென்றுவிடுவதால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் போலீஸார் மெத்தனத்தை கடைபிடித்து வருகின்றனர். இதனால், காலை, மாலைகளில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும் காலை, மாலைகளில் நகரின் பிரதான இடங்களில் போக்குவரத்து போலீஸாரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் மாவட்டக் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சாலைப் பணியால் போக்குவரத்து நெரிசல்: இந்நிலையில், பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து சங்குப்பேட்டை வரை சுமார் 20 நாள்களுக்கும் மேலாக ஆமை வேகத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியும் காலையிலும், மாலைகளில் நடைபெறுவதால் நெரிசலால் வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில்கூட நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபடவில்லை. இதனால், செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதனால், வெங்கடேசபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். எனவே, மேற்கண்ட இடங்களில் நிகழும் விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், பழுதடைந்த சிக்னல்களையும் சீமைக்க வேண்டும். மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில் காலை, மாலை நேரங்களிலாவது போக்குவரத்து போலீஸாரை நியமிக்க மாவட்டக் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.