கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்கக் கூடாது: தொல். திருமாவளவன்

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணு கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணு கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன். 
      பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:  
உள்ளாட்சித் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடக் கூடாது எனவும், உடனடியாக நடத்த வேண்டும் எனவும் வழிகாட்டியுள்ளது.  இருப்பினும், மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கு அஞ்சுவதாகத் தெரிகிறது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவற்கான தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 
தலித் மக்களை அதிகமாகக் கொண்ட சென்னை மாநகராட்சியை, தலித் மக்களுக்கான தலைவர் பதவியை தனி ஒதுக்கீடாக அறிவிக்க வேண்டும். மதச்சார்ப்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளை உடனடியாகக் கூட்டி, ஹைட்ரோ கார்பன் திட்டம், புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்த வேண்டும். ஜூலை 14 ஆம் தேதி சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. 
விருது பெறுவோர் பெயர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை என்பது உள்கட்சி பிரச்னை. ஆனாலும் கூட, இரட்டை தலைமையை தவிர்த்து அதிமுகவு-க்கு ஒற்றைத் தலைமை தேவை எனக் கருதுகிறேன். தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கருக்கு மேல் பஞ்சமி நிலங்கள் உள்ளது. இதைக் கண்டறிந்து மீட்டு தலித் மக்களிடம்  ஒப்படைக்க வேண்டும். இதற்காக, ஏற்கெனவே அமைக்கப்பட்ட மருதமுத்து ஆணையம் மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.  கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணுக்கழிவு மையத்தை உருவாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது மிகவும் ஆபத்தானது . இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை ஜூலை 9 ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்போம். அணு கழிவு மையத்தை அந்த வளாகத்திற்குள் அமைப்பதை தவிர்க்க வலியுறுத்துவோம். அணு உலை வளாகத்திற்குள் கழிவு மையம் அமைப்பதை கைவிட மத்திய அரசிற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com