ரூ.2.41 கோடியில் பண்ணை இயந்திரங்கள் வழங்கல்
By DIN | Published On : 06th March 2019 09:12 AM | Last Updated : 06th March 2019 09:12 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கூட்டுப் பண்ணைய திட்டத்தின் மூலம் உழவர் குழுக்களுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 40 உழவர் உற்பத்தியாளர் குழவினருக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கிய ஆட்சியர் வே. சாந்தா பேசியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் செயல்பட்டு வரும் 40 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் தொகுப்பு நிதி வீதம் ரூ. 2 கோடி நிதி அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந் நிதியைக் கொண்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 40 குழுக்களுக்கு 186 இயந்திரங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது என்றார் ஆட்சியர் சாந்தா.
தொடர்ந்து, 40 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 9 டிராக்டர்கள், 27 ரோட்டாவேட்டர் கலப்பைகள், 26 பவர் டில்லர்கள், 5 மினி டிராக்டர்கள், 118 களை எடுக்கும் கருவிகள், ஒரு மக்காச்சோளம் கதிரடிக்கும் இயந்திரம் என மொத்தம் 186 கருவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மு. இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.