தேர்தல் விளம்பரங்களுக்கு ஊடக அனுமதி அவசியம்
By DIN | Published On : 22nd March 2019 09:05 AM | Last Updated : 22nd March 2019 09:05 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் அரசியல், தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூர் கேபிள் டிவி, தொலைக்காட்சி, பத்திரிக்கை செய்தியாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் தொடர்பான விளக்கக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் பேசியது:
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவின் அறையில் தொலைக்காட்சி பெட்டிகள், செய்திகளை கணினியில் பதிவேற்றம் செய்ய பிரத்யேக மென்பொருள் வசதிகள் கொண்ட கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி சுழற்சி முறையில் நடைபெறுகிறது.
மேலும், அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் ஒளிபரப்பாகி வரும் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்புகளும் கண்காணிக்கப்படுகிறது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்ய தாங்கள் தயாரித்த விளம்பரத்தை இக்குழுவினரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இந்த குழுவினர் செய்தித்தாள்களில் வெளிவரும் விளம்பரங்கள், பிரசார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவற்றை கண்காணிப்பார்கள். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கேபிள் டிவி நிறுவனத்தினர் அனுமதி பெறாமல் விளம்பரம் ஒளிபரப்பினால் நோட்டீஸ் அனுப்பப்படும். அதேபோல நாளிதழ்களில் அரசியல் கட்சியினரின் தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கும் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்றார் அழகிரிசாமி.
கூட்டத்தில், வட்டாட்சியர் முத்துக்குமார், உள்ளூர் கேபிள் டிவி மற்றும் தொலைக்காட்சி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...