குடிநீர் முறைகேடு: மின் மோட்டார்கள் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 07:41 AM | Last Updated : 28th March 2019 07:41 AM | அ+அ அ- |

பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீரை அனுமதியின்றி எடுக்கப் பயன்படுத்திய மின் மோட்டர்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, 8,350 இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யும்போது, பொதுமக்கள் தங்கள் வீட்டு குடிநீர் இணைப்பில் சட்டத்துக்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பதாக நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் கிடைத்ததாகத் தெரிகிறது. அதனடிப்படையில், அலுவலர்கள் மூலம் நகராட்சிக்குள்பட்ட 6 மற்றும் 7 -வது வார்டுகளில் குடிநீர் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சட்டத்துக்கு புறம்பாக மின் மோட்டர் பொருத்தி திருட்டுத்தனமாக தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட்டு 3 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகம் செய்யும்போது, பொதுமக்கள் தங்களது குடிநீர் இணைப்பில் சட்டத்துக்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்வதுடன் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும். கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீரை வீணாக்கமால் சிக்கனமாக பயன்படுத்தி அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...