மனித உரிமை மீறல்: பெரம்பலூர் அரசு அதிகாரிகள் 2 பேருக்கு தலா ரூ. 1.50 லட்சம் அபராதம்
By DIN | Published On : 28th March 2019 07:43 AM | Last Updated : 28th March 2019 07:43 AM | அ+அ அ- |

நில விவகாரத்தில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு தலா ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து, மாநில மனித உரிமை ஆணையத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்கு உள்பட்ட முருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் அளித்த மனு: முருக்கன்குடி கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கடந்த 100 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இதன் காரணமாக எனது தந்தை பச்சமுத்து பெயருக்கு கடந்த 1997-ஆம் ஆண்டு மாவட்ட வருவாய்த் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது.இந்நிலையில், அந்த நிலத்தில் இருந்த வீட்டை இடித்து விட்டு, புதிய வீடு கட்டத் திட்டமிட்டு அதற்கான பணிகள் கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.அப்போது, அங்கு வந்த குன்னம் வட்டாட்சியர் செல்வம், கீழப்புலியூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், எனது தந்தை பெயருக்கு அரசு பட்டா அளித்த விவரத்தைக் கூறியபோதும், அதை ஏற்றுக் கொள்ளாத வட்டாட்சியர் செல்வம், வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் போலீஸ் துணையுடன், கட்டப்பட்டு வந்த வீட்டை இடித்து தள்ளினார். நிலத்துக்கான பட்டாவைக் காண்பித்தும் கூட, வீட்டை இடித்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ரூ. 3 லட்சம் அபராதம்: இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர், நீதிபதி துரை ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் குன்னம் வட்டாட்சியர் செல்வம், வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ரூ. 1.50 லட்சம் அபராதம்
விதிக்கப்படுவதுடன்,
இந்தத் தொகையை அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட அமுதாவுக்கு ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். மேலும், வட்டாட்சியர் செல்வம், வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், பச்சமுத்துக்குச் சொந்தமான நிலத்தை திருப்பி வழங்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்வதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...