குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட, விடுபட்ட வேட்பாளர்களாக இருந்தால், அவர்கள் நாளிதழ்களில் 3 முறை விளம்பரம் செய்திட வேண்டும் என்றார் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:
தேர்தல் ஆணையம் அறிவித்தவாறு ரூ. 70 லட்சம் மட்டுமே ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்யலாம். வேட்பாளரால் செய்யப்படும் செலவு சட்டத்துக்குள்பட்டு, விதிகளுக்கும் புறம்பான செலவு என இரண்டு வகையாக கணக்கிடப்படும். பொதுக்கூட்டம், ஊர்வலம், போஸ்டர், பேனர்கள், நாளிதழ் விளம்பரச் செலவுகள், டி.வி. மூலம் விளம்பர செலவுகள் போன்றவையும், வாகனங்களை பயன்படுத்துதல் ஆகியவை சட்டத்துக்குள்பட்ட தேர்தல் செலவினங்களாகும்.
வாக்களிக்க பணம் கொடுத்தல், மதுபானம் விநியோகித்தல், இதர விதங்களில் வாக்காளர்களை கவருவதற்காக அளிக்கப்படும் பரிசுப் பொருள்கள் ஆகியவை சட்டத்துக்கு புறம்பான தேர்தல் செலவினங்களாகும். இதுபோன்ற செலவுகள் மீது இந்திய தண்டனை சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு வேட்பாளருக்கு சாதகமாக அவர்களின் சாதனைகள் பற்றி, நற்பண்பு கொண்டவர், மக்களுக்கு பல நன்மைகளைச் செய்வார் என்று அல்லது இதர விவரங்கள் குறித்து நாளிதழ்களில் செய்திபோல் வெளியிடப்படும் விவரங்களும் வேட்பாளர் செலவு செய்து விளம்பரம் கொடுத்ததாகவே கணக்கிடப்படும். மேற்கண்ட செலவினங்கள் வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதுடன் காவல்துறை அல்லது நீதித்துறை நடுவருக்கு புகார் அளிக்கப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி தேர்தல் செலவினம் தொடர்பாக ஒரு கணக்கு பராமரிக்க வேண்டும். மனு தாக்கல் செய்த நாள் முதல் தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் வரை இக்கணக்கு எழுதப்பட வேண்டும்.
மேலும், தேர்தல் செலவு செய்யத் தேவையான தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, தேர்தல் செலவினங்கள் அனைத்தும் வங்கிக் கணக்கில் இருந்தே மேற்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு வேட்பாளரின் பெயரில் அல்லது அவரது முகவர் பெயரில் கூட்டாக தொடங்கலாம். வேட்பாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலமாக அல்லது வேறு நபர் மூலமாக உரிய அங்கீகார கடிதத்துடன் தேர்தல் கணக்குகளை, தேர்தல் கணக்கு பார்வையாளர் முன் குறைந்தபட்சம் 3 முறை ஆய்வுக்கு தாக்கல் செய்யவேண்டும் என்றார் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தா.
கூட்டத்தில், தேர்தல் பொதுப் பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என். விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.