"பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் காரணம் அரசியலமைப்புச் சட்டமே- ராமதாஸ் அல்ல'

தமிழகத்தில் பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக்
Updated on
2 min read

தமிழகத்தில் பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் காரணம் அரசியலமைப்புச் சட்டமே தவிர,  ராமதாஸ் அல்ல என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், துறைமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது: 
 2 ஜி அலைக்கற்றையில் நான் செய்தது தான் புரட்சி என்று நீதிமன்றம் சென்று நிரூபித்து, குற்றமற்றவன் என வெளிவந்தவன் நான். 
இந்த மண்ணின் மைந்தனாகிய நான், தொகுதி மக்களின் நலனுக்காக பெரம்பலூரில் கலைக்கல்லூரி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், மருத்துவக்கல்லூரி மற்றும் அரியலூரில் பொறியியல் கல்லூரி ஆகியவற்றுக்கு எனது பெற்றோர் அறக்கட்டளை சார்பில் நிலங்களை வாங்கி தானமாக அளித்துள்ளேன். 
ராமதாஸ் அவ்வாறு ஒரு செண்ட் நிலமாவது மக்களின் நலனுக்காக வழங்கியது உண்டா.  எனது பதவிக் காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு வர வேண்டிய அனைத்துத்  தொழிற்சாலைகளும்  மேற்கு வங்கம், குஜராத் மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. 
 தமிழகத்தில் பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணம் அரசியலமைப்புச் சட்டமே தவிர, ராமதாஸ் அல்ல.  நமக்கு ஒரு சமூக கடமை உள்ளது.  நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றத் துடிக்கும்  பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் ஆ. ராசா. திமுக கூட்டணியில், பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிடும் டி.ஆர். பாரிவேந்தர் பேசியது:
நான் படிப்படியாக உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். எனது கல்வி நிலையங்களில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாகக்  கல்வி அளிக்கிறோம். 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். 
தரமான கல்வியுடன் வேலை வாய்ப்புக்கும் உத்தரவாதம் இருப்பதால் தான், எங்களது கல்வி நிறுவனத்துக்கு மாணவர்கள் தேடி வந்து தரமான கல்வியைப் பயில்கின்றனர். வன்னியர் மக்களின் பங்களிப்பில் உருவான கல்வி அறக்கட்டளையை, தனது மனைவி பெயரில் அமைத்துக்கொண்டவர் அவர். அங்கு தரமானக் கல்வி வழங்கவில்லை.  இதனால், அங்கே மாணவர்கள் சேர விரும்புவதில்லை. இந்த காழ்ப்புணர்ச்சியில் என்னை விமர்சிக்கிறார் என்றார் அவர்.  
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியது: 
பாரிவேந்தர் தனது கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, நாடறிந்த கல்வி நிறுவனங்களின் அதிபராக உருவெடுத்துள்ளார். இவரது  வளர்ச்சியைப் பிடிக்காத பாமக தலைவர், பொறாமையில் இவரைப்பற்றி அவதூறு பரப்பி வருகிறார். 
பாரிவேந்தர் சிறந்த தகுதியும், கல்வித்துறையில் நல்ல அனுபவமும் உள்ளவர் என்பதால் அவர் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. இத்தொகுதியில் பாரிவேந்தர் வெற்றி பெற,  கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சியினரும் அயராது உழைக்க வேண்டும் என்றார் அவர்
இக்கூட்டத்துக்கு, திமுக மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச் செயலர் 
ஜயசீலன், காங்கிரஸ் கட்சி மாவட்டத்  தலைவர் த. தமிழ்செல்வன், மதிமுக மாவட்டச் செயலர் கு. சின்னப்பா, மாநில விவசாயப் பிரிவுத் தலைவர் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வீ.ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி இரா. கிட்டு, மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com