ஜவுளிப் பூங்கா, சின்னமுட்லு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
By DIN | Published On : 05th May 2019 03:30 AM | Last Updated : 05th May 2019 03:30 AM | அ+அ அ- |

கிடப்பில் உள்ள பாடாலூர் ஜவுளிப் பூங்கா, சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சி கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் என். செல்லதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநிலச் செயலர் சாமி. நடராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க அரசு முன்வர வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, 75 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பாடாலூரில் கிடப்பில் உள்ள ஜவுளிப்பூங்கா திட்டத்தை உடனடியாக
தொடங்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலம் திட்டத்தை செயல்படுத்தாதபட்சத்தில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் மாதம் மாநிலத் தலைவர்கள் தலைமையில் பேரணி நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் சின்னசாமி, விநாயகம், சுபா. தங்கராசு, வரதராஜூ, கருப்புடையார், இளையபெருமாள், கோவிந்தராஜூ, சாமிதுரை, பச்சையா உள்பட பலர் பங்கேற்றனர்.