பெரம்பலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பு
By DIN | Published On : 15th May 2019 08:34 AM | Last Updated : 15th May 2019 08:34 AM | அ+அ அ- |

வழக்குரைஞரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து, பெரம்பலூர் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் மீது பாலியல் புகார் அளித்த வழக்குரைஞர் ப. அருளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள தமிழக அரசின் செயலைக் கண்டித்தும், குண்டர் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பெரம்பலூர் பார் அசோசியேஷன் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடைபெற்ற பணி புறக்கணிப்பில், அச்சங்கத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவர் முகமது இலியாஸ் தலைமையில், அச்சங்கத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் அண்மைக்காலமாக நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரு சங்கங்கங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அன்றாட பணிகள் தேக்கமடைந்தன. மேலும், வழக்காடிகளும் அவதியடைந்தனர்.