நீதித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
By DIN | Published On : 19th May 2019 08:55 AM | Last Updated : 19th May 2019 08:55 AM | அ+அ அ- |

நீதித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நீதித்துறை ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ராசேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில்குமார், மாநில பொதுச்செயலர் அருணாச்சலம், மாநில பொருளாளர் கண்ணபிரான் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கோரிக்கைள் குறித்து விளக்கி பேசினர்.
இக்கூட்டத்தில், நீதித்துறையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும். நீதித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்பிட வேண்டும். பெரம்பலூர் மாவட்ட நீதித்துறை ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட நீதிபதிக்கு தெரிவித்து, அவற்றை நிறைவேற்ற ஒற்றுமையாக செயல்படுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பெரம்பலூர் மாவட்ட செயலர் துரை, மாவட்ட பொருளாளர் பண்டாரம், இலவச சட்ட முணையத்தின் முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.