பளுதூக்கும் விளையாட்டு விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th May 2019 08:59 AM | Last Updated : 19th May 2019 08:59 AM | அ+அ அ- |

வேலூரில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு மையத்தில், பளு தூக்கும் விளையாட்டுப் பயிற்சியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பளுதூக்கும் விளையாட்டில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிகளவில் ஒலிம்பிக், சர்வதேச போட்டிகளில் பங்கேற்றது மற்றும் பதக்கங்கள் வென்றதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு வேலூர் சத்துவாச்சாரியில் முதன்மை நிலை விளையாட்டு மையம் தொடங்கியுள்ளது.
அதன்படி, வேலூர் சத்துவாச்சாரியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர 7, 8, 9, 11 ஆம் வகுப்புகள், கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்களில் முதலாமாண்டு பயில உள்ள விளையாட்டுத் திறமை மிக்க மாணவ, மாணவியர்கள் தகுதி அடிப்படையில் பளு தூக்குதல் விளையாட்டுகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விடுதியில் சேருவதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், ஆன்லைனில் பூர்த்தி செய்து, மே 29ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு வேலூர் சத்ததுவாச்சாரியில் உள்ள பளு தூக்குதல் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் மே 30ஆம் தேதி காலை 8 மணிக்கு மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய பளு தூக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.