பெரம்பலூர்: பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக விழா
By DIN | Published On : 19th May 2019 08:55 AM | Last Updated : 19th May 2019 08:55 AM | அ+அ அ- |

பெரம்பலூர்- எளம்பலூர் சாலை அருகே எழுந்தருளியுள்ள பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, சனிக்கிழமை காலை 10 மணிக்கு உற்சவர் பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சந்தனக் காப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பாலமுருகன் திருவீதி உலா நடைபெற்றது. இதில், பெரம்பலூர் நகரைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முருகனுக்கு உகந்த நாளான வைகாசி விசாக விழாவையொட்டி செட்டிக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன.