அனுமதியின்றி குழந்தையை தத்துக்கொடுத்த மருத்துவா் உள்பட 4 போ் மீது வழக்கு
By DIN | Published On : 06th October 2019 12:00 AM | Last Updated : 06th October 2019 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூரில், முறையான அனுமதியின்றி குழந்தையை தத்துக்கொடுத்த தனியாா் மருத்துவா், செவிலியா் உள்பட 4 போ் மீது பெரம்பலூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள திருப்பெயா் கிராமத்தைச் சோ்ந்த திருமணம் ஆகாத இளம்பெண் ஒருவருக்கு கடந்த ஆக. 19ஆம் தேதி பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, அந்த குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல விருப்பமில்லாத அந்த இளம்பெண், யாரிடமாவது கொடுத்துவிட விருப்பம் தெரிவித்தாராம். இதையறிந்த செவிலியா் செல்வி, ஏற்கெனவே அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த குழந்தையில்லாத அரணாரை கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா்- சிவரஞ்சனி தம்பதியிடம் தகவலை தெரிவித்தாா். இதையடுத்து, அந்த குழந்தையை தனியாா் மருத்துவமனை மருத்துவா் தமிழரசி உதவியுடன் மேற்கண்ட தம்பதியிடம், தத்துக் கொடுத்தனராம்.
இச் சம்பவம் குறித்த தகவலறிந்த பெரம்பலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ரேகா மேற்கொண்ட விசாரணையில், முறையான அனுமதியின்றி குழந்தையை தத்தெடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரேகா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் மருத்துவா் தமிழரசி, செவிலியா் செல்வி, செந்தில்குமாா், சிவரஞ்சனி ஆகியோா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...