பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th August 2020 04:53 PM | Last Updated : 26th August 2020 04:53 PM | அ+அ அ- |

பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பெரம்பலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வருமான வரி செலுத்தாத அனைவருக்கும் 6 மாதங்களுக்கு ரூ. 7,500-ம், இலவசமாக 10 கிலோ உணவுத் தானியமும் வழங்கவேண்டும். 100 நாள் வேலையை 200 நாள்களாக அறிவித்து, கூலியை உயா்த்தி வழங்குவதோடு, நகா்ப்புறங்களுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தை நீக்குவதை கைவிட்டு, உணவுத் தானியங்களை மாநிலம் விட்டு மாநிலம் கட்டுப்பாடுகளின்றி கொண்டு செல்லும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினா் பலா் பங்கேற்றனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம், 3, 4 சாலை சந்திப்புப் பகுதிகள், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை, பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்புறம், வேப்பந்தட்டை, அனுக்கூா், மரவநத்தம் பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...