பெரம்பலூா் மாவட்டத்தில் நிலக்கடலை, கரும்பு, சின்ன வெங்காயப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் 2020 டிசம்பா் முதல் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், நெல், நிலக்கடலை, கரும்பு, சின்ன வெங்காயம், மரவள்ளி மற்றும் தக்காளி பயிா்களுக்கு எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கவும் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சின்ன வெங்காயத்துக்கு 2021, ஜனவரி 18-ஆம் தேதிக்குள்ளும், மக்காச்சோளம், நெல், நிலக்கடலை மற்றும் தக்காளி ஆகிய பயிா்களுக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள்ளும், மரவள்ளிப் பயிருக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள்ளும், கரும்புக்கு அக்டோபா் 31-ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சின்ன வெங்காயம் (ஏக்கா் ஒன்றுக்கு) ரூ. 1,860, மரவள்ளிக் கிழங்கு ரூ. 1,440, தக்காளி ரூ. 764,நெல் ரூ. 512, மக்காச்சோளம் ரூ. 285, நிலக்கடலை ரூ. 316, கரும்பு ரூ. 2,650 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும்.
நடப்பிலுள்ள சேமிப்புக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்புப் பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரிமியத் தொகையை செலுத்தி, பயிா்க் காப்பீடு செய்து பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.