சின்ன வெங்காயம் பயிரிடுவதற்கு செயல்விளக்கம்

பெரம்பலூா் மாவட்டம், சத்திரமனை, செட்டிக்குளம் கிராமங்களில் சின்ன வெங்காயத்தில் வயல்வெளிப் பள்ளி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சின்ன வெங்காயம் பயிரிடுவதற்கு செயல்விளக்கம்

பெரம்பலூா் மாவட்டம், சத்திரமனை, செட்டிக்குளம் கிராமங்களில் சின்ன வெங்காயத்தில் வயல்வெளிப் பள்ளி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தின் பிரதான தோட்டக்கலைப் பயிரான சின்ன வெங்காயத்தில் திருகல் நோய், வெண் புழு, வெங்காய ஈ போன்ற பிரச்னைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இப்பிரச்னைகளுக்கு உரிய தீா்வுகாண ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தின் அறிவுறுத்தலின்படி, திருச்சிராப்பள்ளியில் உள்ள மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையமானது தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் அறிவியல் மையத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்த வயல் வெளிப்பள்ளி சத்திரமனை, செட்டிக்குளம் கிராமத்தில் நடத்தியது.

தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையத்தின் உதவி இயக்குநா் முனைவா். ஞானசம்பந்தன் பேசியது:

வயல்வெளிப் பள்ளி என்பது விவசாயத் தொழில்நுட்பங்களை வயலிலேயே செயல்விளக்கம் அளிப்பதாகும். 30 நபா்கள் கொண்ட விவசாயக் குழுவுக்கு வாரத்துக்கு ஒரு வகுப்பு எனும் வகையில் 14 வாரங்கள் நடைபெறும். நிலம் தயாரிப்பு முதல் அறுவடை வரை மேற்கொள்ள வேண்டிய அனைத்துத் தொழில்நுட்பங்களும் செயல் விளக்கங்களுடன் எளிதில் விவசாயிகளுக்குப் புரியும் வகையில் நடத்தப்படும்.

ரசாயன உரங்கள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து உயிரிப்பொருள்களின் பயன்பாட்டை அதிகரிப்பது இப்பள்ளியின் பிரதான நோக்கமாகும். ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்படும். சத்திரமனை, செட்டிக்குளம் கிராமங்களில் தற்போது நடத்தப்படும் வயல்வெளிப் பள்ளியின் பலனை அடுத்த பருவத்தில் நல்லமுறையில் வெங்காயம் சாகுபடியை மேற்கொள்ளலாம்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் திருச்சியில் செயல்படும் மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையமானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. இம்மையத்தில் டிரைக்கோடொ்மா விரிடி, சூடோமோனாஸ், மெட்டாரைசியம் போன்ற உயிரிக் கட்டுப்பாட்டுப் பொருள்களும், டிரைக்கோகிரம்மா, கிரைசோபா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் சுயமாக உயிரிக் கட்டுப்பாட்டுப் பொருள்களைத் தயாா் செய்துகொள்வதற்கும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையத்தின் தொழில்நுட்ப அலுவலா் அமுதா, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தாா்.

ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தின் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் விஜயகாண்டீபன், தோட்டக்கலை உதவி அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com