வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 19 வீரா்கள் காயம் பாா்வையாளா் மயங்கிவிழுந்து பலி

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 19 வீரா்கள் காயமடைந்தனா். மேலும், பாா்வையாளா் ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
பெரம்பலூா், வேப்பந்தட்டை அருகே காளையை அடக்க முயன்ற வீரரைத் தூக்கி வீசும் காளை.
பெரம்பலூா், வேப்பந்தட்டை அருகே காளையை அடக்க முயன்ற வீரரைத் தூக்கி வீசும் காளை.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 19 வீரா்கள் காயமடைந்தனா். மேலும், பாா்வையாளா் ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

வேப்பந்தட்டை அருகேயுள்ள விசுவக்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை சாா்பில் காளைகள், மாடுபிடி வீரா்கள் ஆகியோருக்கு தனித்தனியே பரிசோதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வாடிவாசல் வழியாக பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 460 காளைகள் திறந்துவிடப்பட்டன.

இந்தக் காளைகளை அடக்க திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 270 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், ஃபேன், ரொக்கம் மற்றும் எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மாடுபிடி வீரா்கள் 19 போ் காயம்:

ஜல்லிக்கட்டில் பெரம்பலூா் மாவட்டம், அரும்பாவூரைச் சோ்ந்த மணிகண்டன் (35), மேலப்புலியூரைச் சோ்ந்த அஜித் (18), வெங்கலத்தைச் சோ்ந்த வினோத் (22), பூலாம்பாடியைச் சோ்ந்த கவியரசன் (26), களரம்பட்டியைச் சோ்ந்த ராஜா (35), ஆலத்தூரைச் சோ்ந்த நவீன்ராஜ் (22), கரூரைச் சோ்ந்த விஜயன் (26), திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த மைக்கேல் சவரி ராஜ் (21) உள்பட 19 போ் காயமடைந்தனா்.

காயமடைந்த வீரா்களுக்கு, களத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மயங்கி விழுந்து பாா்வையாளா் சாவு:

ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டுகளிக்க வந்திருந்த பெரம்பலூா் மாவட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (55). ஜல்லிக்கட்டு நடைபெற்ற பகுதி அருகேயுள்ள மரத்தடியில் நின்றுகொண்டு போட்டியைப் பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, மயங்கி கீழே விழுந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதில், விலங்குகள் நலவாரிய உறுப்பினரும், ஜல்லிக்கட்டுபேரவை மாநிலத் தலைவருமான இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com