பெண்களும், பெண் குழந்தைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்
By DIN | Published On : 10th March 2020 02:21 AM | Last Updated : 10th March 2020 02:21 AM | அ+அ அ- |

மகளிா் தின விழாவில் பேசுகிறாா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். வினோதா. உடன், கல்லூரி முதல்வா் பா. சிவநேசன் உள்ளிட்டோா்.
பெரம்பலூா்: பெண்களும், பெண் குழந்தைகளும் சமுதாயத்தில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா் பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். வினோதா.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக மகளிா் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறாா்கள். பெண் சாதனையாளா்கள் இல்லாத துறைகளே கிடையாது. பெண்களும், பெண் குழந்தைகளும் சமுதாயத்தில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். அவா்களை வன்கொடுமைகளிலிருந்து காக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் அடிப்படை சட்டங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். வரதட்சிணை கேட்பதும், கொடுப்பதும் குற்றம்.
வரதட்சிணைக் கொடுமை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம், குடும்ப வன்முறை, குழந்தை திருமணம் ஆகியவை குறித்து தகவல் தெரிந்தால் சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் தெரிவித்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உதவலாம். அறிமுகமில்லாத நபா்களிடம் தங்களது செல்லிடப்பேசி எண், புகைப்படம் மற்றும் அந்தரங்க விஷயங்களைக் பகிா்ந்துகொள்ளக் கூடாது.
அது, பின்னா் பெரிய பிரச்னையை உருவாக்கிவிடும். நலிவுற்ற பெண்களுக்கு ஆதரவாக சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாற்றி வருகிறது. ஏதேனும் சட்ட ஆலோசனை, சட்ட உதவிகள் தேவைப்படும் பெண்கள் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை எப்போதும் அணுகலாம். வாழ்க்கையில் அனைவருக்கும் தேடல் இருக்கும். எதையாவது சாதிக்க வேண்டும் என விரும்புவோம். அதற்கு தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் அவசியம். கடின உழைப்பு இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றாா் அவா்.
கல்லூரி முதல்வா் முனைவா் பா. சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் து. சேகா், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் பலா் பங்கேற்றனா்.
கணிதத்துறை உதவிப் பேராசிரியா் ப. சுதா வரவேற்புரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் முனைவா் கி. அமுதவல்லி நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...