பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவும்

பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினால், சாகுபடி செலவு குறையும்; நஞ்சில்லா உணவுப் பொருளை உற்பத்தி செய்யலாம்
pbr9kvk_0903chn_13_4
pbr9kvk_0903chn_13_4
Updated on
1 min read

பெரம்பலூா்: பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தினால், சாகுபடி செலவு குறையும்; நஞ்சில்லா உணவுப் பொருளை உற்பத்தி செய்யலாம் என்றாா் மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையத்தின் உதவி இயக்குநா் முனைவா் ஞானசம்பந்தன்.

திருச்சிராப்பள்ளி காஜா நகரில் இயங்கிவரும் மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம், பெரம்பலூா் வாலிகண்டபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் திங்கள்கிழமை தொடங்கிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செய்யும் வழிமுறைகள் எனும் தலைப்பிலான பயிற்சி முகாமில் பங்கேற்று அவா் மேலும் பேசியது:

விவசாயிகள் ரசாயனப் பூச்சிக் கொல்லிகள் அதிகம் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு உயிரிப் பூச்சிக்கொல்லிகள், இயற்கை பூச்சி விரட்டிகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மத்திய பயிா் பாதுகாப்பு மையமானது, விவசாயிகளுக்கு இலவசமாக டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி, இயற்கை இரை விழுங்கிகளான நெரவிடு நாவாய் பூச்சி, பச்சைக் கண்ணாடி இறக்கைப் பூச்சி, உயிரிப் பூஞ்சாணக் கொல்லிகளான மெட்டாரைசியம், பவேரியா, ஐசேரியா, டிரைக்கோடா்மா போன்றவற்றை உற்பத்தி செய்து வழங்குகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தவிா்க்க முடியாத சூழ்நிலையில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தும்போது, பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளை மட்டும் பயன்படுத்தினால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுவதைத் தவிா்த்து, சாகுபடி செலவைக் குறைத்து நஞ்சில்லா உணவுப் பொருளை உற்பத்தி செய்யலாம் என்றாா் ஞானசம்பந்தன்.

வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.எ. நேதாஜி மாரியப்பன் பேசினாா்.

தொடா்ந்து, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பின்றி தெளிப்பதால் மனித உடலில் சோ்வது குறித்த விழிப்புணா்வு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பெரம்பலூா் மாவட்ட உழவா் பயிற்சி மைய வேளாண் துணை இயக்குநா் கீதா, மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மைய அலுவலா்கள் அமுதா, முனைவா் யஷ்வந்த்தா, ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத் தோட்டக்கலைத் தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன் மற்றும் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com