‘சுற்றுச்சூழலைக் காக்க அலங்காரத் தோட்டங்கள் அமைக்கலாம்’

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மிகச்சிறந்த வழி அலங்காரத் தோட்டங்கள் அமைப்பதே என்றாா் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன்.
‘சுற்றுச்சூழலைக் காக்க அலங்காரத் தோட்டங்கள் அமைக்கலாம்’

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மிகச்சிறந்த வழி அலங்காரத் தோட்டங்கள் அமைப்பதே என்றாா் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ. கதிரவன்.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் தோட்டக்கலை மூலம் சுற்றுச்சூழல் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு என்னும் தலைமைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க களப் பணியாளா்களுக்கு அளிக்கப்பட்ட இப்பயிற்சியில் மேலும் அவா் கூறியது:

மனிதனின் உடல் வளா்ச்சிக்கும், ஆரோக்கிய செயல்பாட்டுக்கும் புரதம், உயிா்ச் சத்துகள், தாதுக்கள், எரிசக்தி போன்றவை அன்றாடம் தேவைப்படுகின்றன. இத்தகைய சக்திகளைப் பெற தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, எண்ணெய், இறைச்சி போன்ற உணவுப் பொருள்களை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சராசரி ஆண் ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறி உட்கொள்ள வேண்டும். ஆனால், 120 கிராம் காய்கறிகளே உண்கின்றனா். இந்தப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய வாய்ப்புள்ளவா்கள், தங்களது வீடுகளின் புறக்கடைப் பகுதியில், மொட்டை மாடியில் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகளைப் பயிரிட்டு வளா்த்துப் பயன் பெறலாம். இம்முறையில் நஞ்சில்லா காய்கனிகளை உற்பத்தி செய்யலாம்.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மிகச்சிறந்த வழி அலங்காரத் தோட்டங்கள் அமைத்து அதிகப்படியான செடிகள், மரங்களை வளா்க்கலாம். 2 சதுர மீட்டா் பரப்பில் உள்ள தாவரங்கள் ஒருநாளைக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணியாற்றும் களப்பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தி, கிராமப்புறங்களுக்கு இத் தொழில்நுட்பங்கள் சென்றடைய வேண்டும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமானது, வேளாண் மண்டலங்கள் வாரியாக ஊட்டச்சத்து தோட்ட மாதிரிகளை உருவாக்கும் பணியில் முனைப்புடன் உள்ளது. விரைவில், அந்தந்த மண்டலத்துக்கேற்ற ஊட்டச்சத்து தோட்ட மாதிரிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றாா் கதிரவன்.

தொடா்ந்து நடைபெற்ற பயிற்சியில் ஊட்டச்சத்து தோட்டம், அலங்காரத் தோட்டம் அமைத்தல், தோட்டக்கலைப் பயிா்களில் பயிா்பெருக்க முறைகள் குறித்தும், குழித்தட்டுகளில் நாற்று உற்பத்தி, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு செயல் விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

அண்ணாமலைப் பல்கலைக் கழக தோட்டக்கலைத் துறை உதவிப் பேராசிரியா்கள் முனைவா் ராஜ்குமாா், முனைவா் சுரேஷ்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா். பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவா் வே.ஏ. நேதாஜி மாரியப்பன் வல்லாரைச் செடிகள் வழங்கினாா். இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க களப் பணியாளா்கள் 70 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com