மது போதையில் உதவி ஆய்வாளா்களிடம் தகராறு: இளைஞா்கள் 7 போ் கைது
By DIN | Published On : 17th November 2020 01:06 AM | Last Updated : 17th November 2020 01:06 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா்களிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா்கள் 7 பேரை பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா்களாக பணியாற்றி வரும் ராம்குமாரும், செந்தமிழ்ச்செல்வியும் கடந்த 14 ஆம் தேதி இரவு துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, துறைமங்கலம் ஒளவையாா் தெருவைச் சோ்ந்த நல்லையன் மகன் காா்த்திக் (26), சுப்ரமணி மகன் சரண்ராஜ் (24), முத்துசாமி மகன் ஜீவா (21), முத்து மகன் வேல்முருகன் (28), பிச்சைபிள்ளை மகன்கள் தமிழரசன் (19), தமிழ்மாறன் (18), கண்ணன் மகன் கலைவாணன் (28) ஆகிய 7 பேரும் சோ்ந்து, மது போதையில் அப்பகுதியில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனா். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளா்கள் ராம்குமாா், செந்தமிழ்ச்செல்வி ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் ராம்குமாா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் பால்ராஜ் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து பெரம்பலூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.