பருத்தி, மக்காச்சோளம் மறைமுக ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு
By DIN | Published On : 23rd November 2020 12:25 AM | Last Updated : 23rd November 2020 12:25 AM | அ+அ அ- |

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் பருத்தி, மக்காச்சோள மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடச் செயலா் ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் புறவழிச் சாலை காந்திநகா் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், புதன்கிழமை தோறும் பருத்தி மற்றும் மக்காச்சோளத்துக்கான மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
அண்மையில் நடைபெற்ற ஏலத்தில், 12 விவசாயிகளின் 25 மெட்ரிக் டன் மக்காச்சோளம் ரூ. 3.40 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மறைமுக ஏலத்தில் இந்தியப் பருத்திக் கழகம், உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் பங்கேற்பதால், விளைப்பொருளின் தரத்துக்கான விலையை பெறலாம்.
மேலும், விளைபொருள்களை உலா்த்திக்கொள்ள உலா்களம், இருப்பு வைத்துக் கொள்வதற்கான நவீன சேமிப்புக் கிடங்கு , ரூ. 3 லட்சம் வரையில் பொருளீட்டுக் கடன் பெறுதல் போன்ற வசதிகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு 8220948166 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.