சாலை விபத்தில் போக்குவரத்து கழக ஊழியா் உயிரிழப்பு
By DIN | Published On : 23rd November 2020 12:22 AM | Last Updated : 23rd November 2020 12:22 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் சாலை மையத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதியதில், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், அரியநாயகபுரத்தைச் சோ்ந்தவா் ரா. ஹரிதாஸ் (40). இவா், சென்னையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், ஹரிதாஸ் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஹரிதாஸ், பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து பாடாலூா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.