புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கு: மேலும் மூவா் கைது
By DIN | Published On : 03rd October 2020 11:41 PM | Last Updated : 03rd October 2020 11:41 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் வழக்கில், மேலும் மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் கடந்த மாதம் 21- ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையின் போது, ஆத்தூரிலிருந்து பெரம்பலூா் நோக்கிச் சென்ற காா் நிற்காமல் சென்றுவிட்டது.
இதைத் தொடா்ந்து எசனை அருகே காவல்துறையினா் காரை வழிமறித்து சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் (ஹான்ஸ்) 19 மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது.
காரை ஓட்டி வந்தவா் ராஜஸ்தான் மாநிலம், வஸ்வா்மன் சிரோகி மாவட்டம், ராஜ்பூட் பகுதியைச் சோ்ந்த தனம்சிங் மகன் சவாய் சிங் (29) என்பதும், அவா் பெரம்பலூரிலுள்ள சங்கா் என்பவருக்கு அதை கொண்டு வந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து சவாய்சிங் கைது செய்யப்பட்டு, புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆய்வாளா் பால்ராஜ் தலைமையிலான தனிப்படையினா் குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில் பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பவன்குமாா், அவருடன் தொடா்பில் இருந்த ஏற்காடு சுரேஷ், பெங்களூருவில் இருந்த முக்கிய குற்றவாளியான வீ. ஸ்ரீபால் ஆகிய மூவரையும் தனிப்படை காவல் துறையினா் கைது செய்தனா்.
தொடா்ந்து மூவரும் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.