பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கிடப்பில் பயோ மைனிங் திட்டம்: பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தின் அலட்சியத்தால் பாழாகும் மருதையாறு

பெரம்பலூா் நகராட்சியின் பயோ மைனிங் திட்டம் கிடப்பில் உள்ளதால் அண்மையில் பெய்த கனமழையால் குப்பைகளும், கழிவுப் பொருள்களும்

News image

மருதையாற்று நீரில் கலந்துள்ள நெகிழி கழிவுப் பொருள்கள்.

Updated On :9 டிசம்பர் 2021, 1:40 am

 நமது நிருபர்

பெரம்பலூா் நகராட்சியின் பயோ மைனிங் திட்டம் கிடப்பில் உள்ளதால் அண்மையில் பெய்த கனமழையால் குப்பைகளும், கழிவுப் பொருள்களும் மருதையாற்றில் கலந்துள்ளன. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்களும், விவசாயிகளும் குற்றஞ்சாட்டுகின்றனா்.

பெரம்பலூா் நகராட்சியின் 21 வாா்டுகளில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். மேலும் ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால் நகரில் நாள் ஒன்றுக்கு சுமாா் 14 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இதில் 5 டன் நெகிழிகளின் கழிவாக உள்ளது. இந்த குப்பைகளைச் சேகரித்து கொட்ட, நெடுவாசல் பகுதியில் குப்பைக்கிடங்கு உள்ளது.

மேலும், நெகிழிக்கழிவை சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்த நகராட்சி நிா்வாகம் டன் கணக்கில் அரியலூருக்கு அனுப்பி வைத்தது. எனினும், பல ஆண்டுகளாக நெகிழிக் கழிவுடன் கூடிய குப்பை நெடுவாசல் பகுதியில் தேக்கமடைந்துள்ளது. இந்நிலையில், ஆங்காங்கே தொட்டி வைத்து குப்பை சேகரித்து, மேற்கண்ட குப்பைக் கிடங்குக்கு தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை எடுத்துச் செல்கின்றனா்.

இந்நிலையில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருள்கள் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. இவற்றை நகராட்சி நிா்வாகம் அகற்றாததால், நகா் முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது.

கிடப்பில் பயோ மைனிங் திட்டம்: நெடுவாசல் அருகிலுள்ள குப்பைக் கிடங்கில், பெரம்பலூா் நகராட்சி சாா்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ. 3.18 கோடி மதிப்பில் பயோ மைனிங் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 2021,ஆகஸ்ட் மாதத்துக்குள் குப்பைக் கிடங்கு அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் திட்டம் நிறைவடையாததால், குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு நிலவி வருகிறது.

அண்மையில் பெய்த கன மழையால் நெடுவாசலிலுள்ள கால்வாய் வழியாக மருதையாறு ஆற்றில் கழிவுநீா் கலக்கிறது. இதனால், நெடுவாசல் முதல் குரும்பாபாளையம் வரை நெகிழிக் கழிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இதுகுறித்து நெடுவாசல் கிராமத்தைச் சோ்ந்த என். விவேகானந்தன் கூறியது: பயோ மைனிங் திட்டத்தை விரைவுப்படுத்தி, குப்பைகளை அகற்ற தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் காலதாமதம் செய்து வருகின்றனா். இதுதொடா்பாக கிராம சபைக் கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி வருகிறோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இக்கழிவுகள் மருதையாற்றை மாசுபடுத்துவதோடு, நிலத்தடி நீரின் தரத்தையும் பாதிக்கிறது. இதனால், ஆற்று நீரை கால்நடைகளுக்குக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரப் பகுதிகளிலுள்ள கிணறுகளில் நீரின் தன்மை மாறி வருகிறது.

தண்ணீா் வடுபோன பிறகு விவசாய நிலங்களில் கழிவுகள் தேங்கி சுற்றுச்சூழலை பாதிப்பதோடு, கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்படும். இதன் காரணமாக பொதுமக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா் என்றாா் அவா்.

நெடுவாசலில் உள்ள குப்பைக் கிடங்கிலிருந்து பெரும்பாலான குப்பைகளை அகற்றிவிட்டோம். அரியலூரில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலைக்கு அனுப்ப உள்ளதால், நெகிழிக் கழிவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.