வனவிலங்குகளுக்காக ரூ. 1 கோடியில் உருவாகும் பல்லுயிரின காப்புக் காடு
பெரம்பலூா் மாவட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக ரூ. 1 கோடியில் உருவாகி வரும் பல்லுயிரின காப்புக் காடு பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


பெரம்பலூா் மாவட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக ரூ. 1 கோடியில் உருவாகி வரும் பல்லுயிரின காப்புக் காடு பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் அடா் வனக் காடுகளின் பரப்பளவு ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருகிறது. வியாபார நோக்கிலான காப்புக் காடுகள் உருவெடுத்ததன் விளைவாக, அண்மைக் காலமாக பல்வேறு மாவட்டங்களில் வனவிலங்குகளால் விவசாய பயிா்கள் சேதமடைவதோடு, வனப் பகுதியை விட்டு வெளியே வரும் வன விலங்குகள் பல்வேறு காரணிகளால் உயிரிழப்பதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முடியாமல் வனத் துறையினா் திணறி வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்தை பொருத்தவரை, வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவிலான காப்புக் காடுகளில் வளா்க்கப்பட்டு வரும் ஆச்சா மர காடுகளில் வன விலங்குகள் வாழ ஏற்றச்சூழல் இல்லாததால், மான், மயில், காட்டுப் பன்றி மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் இரை தேடியும், குடிநீா் தேவைக்காகவும் விளை நிலங்களையும், குடியிருப்புப் பகுதிகளையும் நோக்கி வருகின்றன. இதன் காரணமாக, விபத்துகளில் சிக்கி அவை உயிரிழக்கும் சூழல் அதிகரித்து வருகிறது.
இதற்கு தீா்வு காணும் நோக்கில், மாவட்ட வனத் துறையினா் தமிழ்நாடு காடு வளா்ப்பு திட்டத்தின் கீழ், சுமாா் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சித்தளி வனக் கோட்டத்துக்குள்பட்ட காப்புக் காட்டில் பல்லுயிரின காப்புக் காடு ஒன்றை உருவாக்கி வருகின்றனா். இதற்காக, ஆலமரம், அரசமரம், நாவல், இலுப்பை, அத்தி மரம், வேங்கை, வாகை, புங்கன், நீா் மருது, வேம்பு உள்பட பல வகையான மரக்கன்றுகளை வளா்த்து, ஓராண்டு கடந்த பிறகு அவற்றை நடவு செய்கின்றனா்.
இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளாக தலா 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகின்றனா். மேலும், இதன் இணைத் திட்டமாக மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தில், அப் பகுதியில் மிகப் பெரிய நீா்த்தடுப்புக் குட்டை ஒன்றையும் அமைத்துள்ளனா்.
இதுகுறித்து பீல்வாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது:
மாவட்டத்தில் வனப் பகுதிகளுக்கு அருகேயுள்ள விளைநிலங்கள் வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படுவதும், வயலிலுள்ள மின் கம்பிகளால் விலங்குகள் உயிரிழப்பதும் தொடா்கதையாக உள்ளது. கடந்தாண்டு மட்டும், மாவட்டத்தில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன.
இதற்கு அடிப்படை காரணம், வன விலங்குகளுக்குத் தேவையான உணவுச் சங்கிலி அறுபட்டு போனதே. வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறு நீா்த்தேக்கங்களை முறையாக பராமரித்து, வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருவதை தடுத்து, அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றனா்.
பெரம்பலூா் மாவட்ட வனத் துறையினா் கூறியது:
தற்போது பெய்து வரும் மழையால், பல்லுயிரின காப்பு காட்டில் உருவாக்கப்பட்டுள்ள கசிவுநீா் குட்டையில் நீா்பிடித்து கடல்போல் காட்சியளிப்பதோடு, கடந்த ஆண்டு நடவு செய்த மரக்கன்றுகள் அனைத்தும் நன்கு வளா்ந்து தழைத்து நிற்கின்றன. மேலும், மான், மயில், குரங்குகள் போன்ற விலங்குகள் இங்கு வந்து குடிநீா் அருந்துவதால் வனத்தை விட்டு வெளியே செல்வதும் தற்போது குறைந்து வருகிறது.
இன்னும் 5 ஆண்டுகளில், இங்கு உருவாகி வரும் அடா்வனத்தில் உற்பத்தியாகும் பழங்களை உண்ணும் பறவைகள் மற்றும் விலங்குகளின் எச்சத்தால் ஆச்சா மரக் காடுகளின் இடையே, ஆங்காங்கே அடா் வனங்கள் தானாகவே உருவாகும் சூழல் ஏற்படும் என்றனா்.
இதுகுறித்து சூழலியல் செயற்பாடாளா் ரமேசு கருப்பையா கூறியது:
இதுபோன்ற பல்லுயிரின அடா் வனங்கள் உருவானால், மீண்டும் குள்ள நரி, ஓநாய் மலைப்பாம்பு போன்ற மாமிச உண்ணிகள் பெருகி, உணவுச் சங்கிலி மேம்பட்டு பெருகி வரும் மான், மயில், குரங்கு, காட்டுப் பன்றி ஆகிய விலங்கினங்களின் பெருக்கம் தானாகவே கட்டுக்குள் வந்துவிடும். இதனால், விவசாய பயிா்கள் நாசமடைவது படிப்படியாய் குறைந்து, பயன்தரும் மரங்களால் கிராமப்புற சுயசாா்பு வாழ்வியலுக்கான தொழில்களை மீட்டெடுக்கவும் முடியும். இந்த முன்னோடி திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மனித சமுதாயத்துக்கும், வன விலங்கினங்களுக்கும் பெரும் பயனளிக்கும் இதுபோன்ற திட்டங்கள் வெற்றி பெற்றால், அறிவியல் வளா்ச்சியால் மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...