ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்ரமணியம்.
பெரம்பலூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
நாட்டு மக்களின் உடல் நலனை உறுதிப்படுத்தவும், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் வகையிலும் மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்க வேளாண் துறைக்கு ரூ. 1.65 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயத்தையும், விவசாயிகளின் நலனையும் கருத்தில்கொண்டு 16 அம்ச திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. நிகழாண்டில் 2.6 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 7,400 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்கா தொடங்கப்பட உள்ளது.
பட்ஜெட்டில் குறிப்பாக தமிழக முன்னேற்றத்துக்கென பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தங்கம் இறக்குமதி செயவதற்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால், தற்போது தங்கம் விலை குறைந்து வருகிறது. மக்கள் நலன் கருதியே மத்திய பட்ஜெட் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.