பெரம்பலூரில் ‘புன்னகை தேடி’ சிறப்புக் குழு தொடக்கம்
By DIN | Published On : 06th February 2021 12:57 AM | Last Updated : 06th February 2021 12:57 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், புன்னகைத் தேடி எனும் சிறப்புக் குழு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவா் ஆனி விஜயா மேற்பாா்வையில், பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையில் புன்னகைத் தேடி என்ற சிறப்புக் குழு வியாழக்கிழமை உருவாக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா், காணாமல்போன குழந்தைகள், பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் சாலையோரம் சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்டு, அக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத் திட்டம் தொடா்பாக, பெரம்பலூா் அருகேயுள்ள எசனை கிராமத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அசிம் தலைமையிலான காவலா்கள் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடா்ந்து, அந்த கிராமத்தில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்து, அவருக்கு குழந்தைத் தொழிலாளா் சட்டம் குறித்து விளக்கிக்கூறி, அந்தக் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...