443 பயனாளிகளுக்கு இலவச மனைப் பட்டா
By DIN | Published On : 20th February 2021 11:25 PM | Last Updated : 20th February 2021 11:25 PM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில், தமிழக அரசின் சிறப்பு வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 443 ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூா்) ஆா்.டி. ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் 443 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பேசியது:
அரசு புறம்போக்கு நிலங்களில் எவ்வித ஆட்சேபனையும் இல்லாத இடங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை அமைத்து வசிக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூா் வட்டத்தில் 252, வேப்பந்தட்டை வட்டத்தில் 69, குன்னம் வட்டத்தில் 42, ஆலத்தூா் வட்டத்தில் 80 என மொத்தம் 443 நபா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.