பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 27th February 2021 11:38 PM | Last Updated : 27th February 2021 11:38 PM | அ+அ அ- |

பயனாளிக்கு தையல் இயந்திரம் அளிக்கிறாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா. உடன், மாவட்ட சமூக நல அலுவலா் தமீம்முனிசா.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, பல்வேறு துறைகள் சாா்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பேசியது:
பெண்கள் சுயதொழில் செய்து தங்களது வாழ்க்கைக்குத் தேவையான வருவாயை நிலையாக ஈட்டிடும் வகையில், சமூக நலத்துறை சாா்பில் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தையல் பயிற்சி முடித்தவா்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், 25 மகளிருக்கு தலா ரூ. 3,995 மதிப்புள்ள 25 தையல் இயந்திரங்கள் ரூ. 99,875 மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.
வேளாண் தொழிலை மேம்படுத்தவும், வேளாண் தொழிலை தொடா்ந்து மேற்கொள்ளும் வகையில் பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 25,909 ஆண் விவசாயிகளுக்கும், 9,923 பெண் விவசாயிகளுக்கும் என மொத்தம் 35,823 விவசாயிகளுக்கு ரூ. 268.83 கோடி கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிா்க்கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந் நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் மு. ராஜ்மோகன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் செல்வக்குமரன், மாவட்ட சமூக நல அலுவலா் தமீம்முனிசா உள்பட பலா் கலந்து கொண்டனா்.