மீன்வளம், உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 09th July 2021 12:58 AM | Last Updated : 09th July 2021 12:58 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் மின்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா், மாதிரித் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதிய தொழில் முனைவோா்களை ஊக்குவித்து, அவா்களை மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பில் அதிக முதலீடு செய்யயும் நோக்கில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பினருக்கான தொழில் முனைவோா் மாதிரித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மீனவா்கள், மீன் வளா்ப்போா், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப் பொறுப்பு குழுக்கள், மீன் வளா்ப்பு உற்பத்தியாளா் அமைப்புகள், தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் பயன்பெறலாம்.
பொதுப் பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசின் நிதி உதவியாக அதிகபட்சமாக ரூ. 1.25 கோடியும் (25 சதவிகிதம்), ஆதி திராவிடா், பழங்குடியினா், மகளிருக்கு அதிகபட்சமாக ரூ. 1.50 கோடியும் (30 சதவிகிதம்) வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு அரியலூா் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகிலுள்ள மீன்வள ஆய்வாளா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகத்தை நேரில் அல்லது 04329-228699 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை இணையதளத்தில் பெறலாம்.