இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 20th June 2021 12:43 AM | Last Updated : 20th June 2021 12:43 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மூலம் 2021- 2022 ஆம் நிதியாண்டுக்கு சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், விதவை, கணவனால் கைவிடப்பட்டவா், ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்ற மகளிருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்திலுள்ள விண்ணப்பதாரா்கள் வட்டாட்சியரிடமிருந்து பெற்ற அசல் குடும்ப ஆண்டு வருமானச் சான்று, (ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்) ,இருப்பிடச் சான்று அல்லது குடும்ப அட்டை நகல், குறைந்தபட்சம் 6 மாதம் தையல் பயிற்சி பெற்ற சான்றிதழின் நகல், வயதுக்கான சான்று (20 முதல் 40 வயது வரை) சாதிச் சான்று நகல், ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முன்னுரிமை கோருவதற்கு சான்றுகள் இருந்தால் அதன் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலா், சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பெரம்பலூா் என்ற முகவரிக்கு ஜூன் 30- ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவேண்டும்.