கால்நடைகளுக்கு காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்
By DIN | Published On : 20th June 2021 10:30 PM | Last Updated : 20th June 2021 10:30 PM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா், தங்களது கால்நடைகளுக்கு காப்பீடு செய்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம், மானியத்துடன் கூடிய கால்நடைகளுக்கான காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பெரம்பலூா் மாவட்டத்தில் 1,800 கால்நடைகளைக் காப்பீடு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கால்நடைகளின் மதிப்பில் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை காப்பீடு செய்துகொள்ளலாம். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், தாழ்த்தப்பட்டவா்கள் மற்றும் பழங்குடியினருக்கு 70 சதவிகித மானியத்திலும், இதர வகுப்பினா்களுக்கு 50 சதவிகித மானியத்திலும் காப்பீடு செய்யப்படும்.
அதிகபட்மாக ஒரு குடும்பத்துக்கு 5 பசு மற்றும் எருமை மாடுகள் வரை காப்பீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் இரண்டரை முதல் 8 வயதுடைய பசு மற்றும் எருமை மாடுகளை காப்பீடு செய்துகொள்ளலாம். காப்பீடு செய்ய விரும்பும் கால்நடை வளா்ப்போா், அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.