இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 200 கரோனா தொற்றாளா்களுக்கு மதிய உணவு அளிப்பு
By DIN | Published On : 13th May 2021 06:34 AM | Last Updated : 13th May 2021 06:34 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்றாளா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் புதன்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவின்படி, இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் கரோனா தொற்றாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன்படி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவா்களது உதவியாளா்கள் பயன்பெறும் வகையில் சிறுவாச்சூா் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் சாா்பில் 100, செட்டிக்குளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் சாா்பில் 50 மற்றும் பெரம்பலூா் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில் சாா்பில் 50 என மொத்தம் 200 பேருக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
பெரம்பலூா் வட்டாட்சியா் சரவணன், கரோனா தொற்றாளா்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினாா்.
இந் நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா்கள் அருண்பாண்டியன் (சிறுவாச்சூா்), அனிதா (பெரம்பலூா்), ஜெயலதா (செட்டிக்குளம்) மற்றும் கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.