பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரையில் 62% பேருக்கு கரோனா நிவாரண நிதி
By DIN | Published On : 19th May 2021 06:34 AM | Last Updated : 19th May 2021 06:34 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களில் இதுவரை 62 சதவீதம் பேருக்கு கரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான ரூ. 2ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
மாவட்டத்தில் கடந்த 13ஆம் தேதி கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 282 ரேசன் கடைகள் மூலம் 1,82, 758 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத்தின் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 36.55 கோடி வழங்கப்படுகிறது.
இதில் இதுவரை 1,14, 409 ரேசன் காா்டுதாரா்களுக்கு, அதாவது 62 சதவீதம் பேருக்கு கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரேசன் காா்டுதாரா்களுக்கு வரும் 22 ஆம் தேதிக்குள் முழுமையாக கரோனா நிவாரண நிதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.