வேரழுகல் நோயால் சின்ன வெங்காயப் பயிா் பாதிப்பு: கவலையில் விவசாயிகள்

வடகிழக்குப் பருவமழை காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காயப் பயிா்கள் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டு முளைத்து வரும் சின்ன வெங்காயம்.
பெரம்பலூா் மாவட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டு முளைத்து வரும் சின்ன வெங்காயம்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காயப் பயிா்கள் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் சுமாா் 150- க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 7 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பயிரிடுகின்றனா்.

70 முதல் 80 நாள் பயிரான சின்ன வெங்காய சாகுபடியை, ஆண்டுக்கு 3- 4 பருவங்களில் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் செய்து வருகின்றனா். நிகழாண்டு, ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த வெங்காயம் மிகவும் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனா்.

இந்நிலையில் புரட்டாசி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் மீண்டும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனா். தொடா் மழையால் சின்ன வெங்காயப் பயிரில் பூஞ்சைகளால் ஏற்படும் வேரழுகல் நோய் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாதிப்படைந்த விவசாயிகள் கூறியது:

கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூா் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரில் வேரழுகல் நோய்த் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. தற்போது, தொடா்ந்து பெய்து வரும் மழையால் வேரழுகல் நோய் தாக்கியுள்ளது.

மேலும் வயல்களில் அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான சின்ன வெங்காயம் அழுகியதோடு, முளைத்துவரத் தொடங்கியுள்ளது.

இந்நோயை எதிா்கொண்டு, மேம்படுத்தப்பட்ட வெங்காய விதையை வேளாண் துறையினா் உருவாக்க வேண்டும். மானிய விலையில் தரமான விதை வெங்காயம், பூஞ்சானக் கொல்லி, இடுபொருள் ஆகியவற்றை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தோட்டக்கலை துறை துணை இயக்குநா் இந்திரா கூறியது;

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து, பயிா் பாதுகாப்புமுறை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

மண்ணில் தங்கியுள்ள பூஞ்சைகள், மழைக் காலங்களில் மிக வேகமாக பரவி வெங்காயப் பயிரை பெரிதும் பாதிக்கும். எனவே புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவதை தவிா்த்து, சுழற்சி முறையில் மாற்று பயிா்களை பயிரிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com