லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 12th September 2021 12:58 AM | Last Updated : 12th September 2021 12:58 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தொடா் விபத்தை தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், மருதடியைச் சோ்ந்த மருதமுத்து மகன் பிரவீன்குமாா் (23). இவா், மருதடியிலிருந்து பாடாலூா் நோக்கி வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தாா்.
திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் திருவிளக்குறிச்சி பிரிவு சாலையில் சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் பிரவீன்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து அவரது உறவினா்கள், அடிக்கடி விபத்து நிகழும் திருவிளக்குறிச்சி பிரிவுச் சாலையில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பாடாலூா் காவல் துறையினா் நிகழ்விடம் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா். விபத்து குறித்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மூடப்பள்ளியைச் சோ்ந்த சு. ராஜ்குமாரை (33) கைது செய்தனா்.