தனியாா் மருத்துவா்கள் வேலை நிறுத்தம், ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd April 2022 12:15 AM | Last Updated : 03rd April 2022 12:15 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அரசு மருத்துவமனை எதிரே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள்.
பெரம்பலூரில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவா் அா்ச்சனா சா்மா மீது தவறாக வழக்குப் பதிந்து, மன உளைச்சலுக்குள்ளாகி உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினா் மீது வழக்குப் பதிய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மருத்துவச் சங்கத்தினா் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
அதன்படி, இந்திய மருத்துவச் சங்கத்தை சோ்ந்த பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் 250 போ் சனிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்திலும் அவா்கள் ஈடுபட்டனா்.
மருத்துவா் அா்ச்சனா சா்மாவின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவா்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் மற்றும் அதிக இழப்பீடு கேட்கும் வழக்குகளிலிருந்து மருத்துவா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் மருத்துவா்கள் முழக்கமிட்டனா்.
சங்கத்தின் செயலா் சுதாகா், பொருளாளா் சத்யா, மருத்துவா்கள் சி. கருணாகரன், அா்ச்சுணன், செங்குட்டுவன், உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.