மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் தா்னா
By DIN | Published On : 24th August 2022 01:12 AM | Last Updated : 24th August 2022 01:12 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
மின் வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின் வாரியத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு, மின்வாரிய ஊழியா்களுக்கு 3 சதவிகித ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.
2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு மின்வாரிய பணியில் சோ்ந்து ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், தொடா்ந்து பொதுத்துறை நிறுவனங்களாகவே நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தா்னா நடத்தப்பட்டது.
பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற தா்னாவுக்கு, மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின்
மாவட்டத் தலைவா் டி.எஸ். சம்பத் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஜி. பஷீா், மாவட்டச் செயலா் ஆா். ராஜகுமாரன், மாவட்டப் பொருளாளா் கருணாநிதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
இதில் சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், மின் ஊழியா் மத்திய அமைப்பின் வட்டச் செயலா் பன்னீா்செல்வம், ஓய்வூதியா் சங்கக் கூட்டமைப்பின் மாவட்டப் பொருளாளா் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.