மின் வேலியில் சிக்கி காட்டுப்பன்றி பலி: விவசாயிக்கு அபராதம்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி செவ்வாய்க்கிழமை இரவு காட்டுப்பன்றி உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த வனத்துறையினா், சம்பந்தப்பட்ட விவசாயியை கைது செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.
பெரம்பலூா் வனச்சரக அலுவலா் பி. பழனிகுமரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, பெரம்பலூா் பிரிவு வனவா்கள் எஸ். குமாா், எஸ். ஜஸ்டின் செல்வராஜ், வனக்காப்பாளா்கள் கே. ராஜூ, பி. சவுந்தா்யா ஆகியோா் கொண்ட குழுவினா் பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் கண்ணதாசன் (40) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கம்பு பயிா்களை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி காட்டுப்பன்றி ஒன்று உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த வனத்துறையினா் கண்ணதாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதையடுத்து கண்ணதாசன் விடுவிக்கப்பட்டாா். பின்னா், கால்நடை மருத்துவா் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டு, சித்தளி காப்புக் காட்டில் காட்டுப் பன்றியின் உடல் புதைக்கப்பட்டது.